மனிதனின் அன்றாட வாழ்வில் நிகழும் அனைத்து செயல்களையும் தீர்மானிப்பதில் பணம் பெரும் பங்கு வகிக்கிறது. பணமே ஒரு மனிதனின் வாழ்வைத் தீர்மானிக்கும் சக்தி என்றால் பிரபஞ்ச சக்திக்கு மதிப்பு இல்லையே. பணத்தைப் படைத்ததே பிரபஞ்சம் தான் என்றால் ஏன் பிரபஞ்சத்தைவிட பணத்திற்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பணத்தைப் பிரபஞ்சம் படைக்கவில்லை. ஆதிமனிதர்கள் பண்டமாற்று முறையிலேயே தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.
பண்டமாற்றுமுறையில் பொருள்களின் மதிப்பீடு, அளவீடு, பகிர்தலில் இருந்த வேறுபாட்டு விகிதத்தை சரிசெய்யவும், உலக வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் மனிதர்களால் முறைப்படுத்தப்பட்ட பண்டமாற்று அளவுகோலே பணம்.
பணம் படைத்தவர்களுக்கு பணத்தைப் பெருக்குவதில் ஆர்வம். பணம் இல்லாதவர்களுக்கு பணத்தை தானும் அடையவேண்டும் என்று ஆர்வம். இப்படி மனிதகுலத்தினரின் ஈர்ப்பு சக்தியாகவுள்ள பணம் ஏன் ஒருவருக்கு மட்டும் கிடைக்கிறது, ஏன் ஒருவருக்குக் கிடைப்பதில்லை? அதற்கு நமது 9-ஆம் பாவகம் காரணம் என்பது தெரிந்ததே.
பணத்தைப்பெற அனைவரும் கடவுளிடம் சென்று, "எனக்கு பணம் வேண்டும்' என்று கேட்டால் நிச்சயம் கிடைக்காது. எனென்றால் மனிதன்தான் பணத்தைப் படைத்தான். கடவுளுக்கு அந்த பணம் வெறும் காகிதம்தான். தனக்கு வேண்டியதை எப்படிக் கேட்டுப் பெறவேண்டும் என்ற சூட்சுமம் தெரியா நிலையே அதற்குக் காரணம். நம் ஜாதகத்தில் நமக்கு என்ன ப்ராப்தம் உள்ளது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவதாக அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் வேண்டும். தான் வாங்கி வந்த வரத்தை (ப்ராப்தம்) புரிந்துகொண்டவன் அதிகம் ஆசைப்படுவதில்லை. தன் செயல்பாட்டை தன் ப்ராப்தத்திற்குள் கட்டுப்படுத்துகிறான்.
ஒரு ஜாதகத்தில் 3, 6, 8, 12 என்பது மறைவு ஸ்தானங்கள். இவை மனிதனின் வாழ்வைத் தடம் புரட்டும் சக்தி படைத்தவை. இருப்பவரை இருந்த இடம் தெரியாமல் செய்துவிடும். இடம் தெரியாமல் இருந்தவரின் இருப்பிடத்தை வெளியுலகிற்கு சுட்டிக்காட்டும் சக்தி படைத்தது.
"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்'’ என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் சிலர் கோடீஸ்வரராகிவிடுவர். 3, 6, 8, 12-ஆம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள். 3-ஆம் அதிபதி 6, 8, 12-ஆம் இடத்திலோ, 6-ஆம் அதிபதி 3, 8, 12-ஆம் இடத்திலோ, 8-ஆம் அதிபதி 3, 6, 12-ஆம் இடத்திலோ, 12-ஆம் அதிபதி 3, 6, 8-ல் மாறி நின்றாலோ, 3, 6, 8, 12-ஆம் அதிபதிகள் பாவகிரகங்களான சூரியன், செவ்வாய், சனியாக இருந்து மறைந்தாலோ புகழுடன் கோடீஸ்வரராக வாழ்க்கை கிடைத்துவிடும். பாதகாதிபதி நீசம், வக்ரம் போன்று வலுவிழந்து தசை நடந்தாலும் ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். சுபகிரக, கேந்திர, திரிகோண அதிபதிகள் ராசியில் நீசம் பெற்று, அம்சத்தில் பலம் பெற்றாலும் சுபயோகப் பலன்களையே தருவர்.
அதிர்ஷ்டத்திற்காக ஏங்குவதைவிட அவரவர் ஜாதகத்தில் எந்த நேரத்தில், எந்தத் துறையில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும் என்பதைக் கண்டறிய வேண்டும். பல வருடங்கள் சேமித்த பொருளைக்கொண்டும், கடன் வாங்கியும் புதிய தொழில் தொடங்கும்போது, முதலில் ஜாதகத்தில் தொழில் தொடங்கும் நேரம் தற்போது உண்டா? தொழிலால் லாபம் கிடைக்குமா? கூட்டுத்தொழில் வெற்றி தருமா என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு பிறகு தொடங்குவது சிறப்பு. சொந்தத் தொழில் செய்தால் வசதியாக வாழலாம் என்று தப்புக் கணக்கு போட்டு, தன்நிலை அறியாமல் தொழில் தொடங்கி முடங்கிப்போனவர்கள் ஏராளம். கோட்சாரத்தில் 10-ல் சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி மற்றும் ஏழரைச்சனிக் காலங்களில் தொழில் சம்பந்தமான பிரச்சினையால் தொழில் நஷ்டம், தொழில் மாற்றம், இடமாற்றம் கண்டிப்பாக ஏற்படும். அத்தகைய காலங்களில் புதிய தொழில் தொடங்குவதைத் தவிர்த்தல் நலம். குரு வருடந்தோறும் மாறுவதால், பொதுவாக குருபலம் இருக்கிறது என்று புதிய தொழில் தொடங்கிவிடக்கூடாது.
கோட்சாரப் பலனை மட்டும் பார்க்காமல் 3, 6, 8, 12-ஆம் அதிபதி தசை, பாதகாதிபதி தசை, மாரகாதிபதி தசைகளைத் தவிர்த்தும், நடக்கும் தசையின் நிலையை ஜாதகத்தில் முறையாகத் தெரிந்துகொண்டும் புதிய முடிவுகளை எடுத்தால் வெற்றி நிச்சயம்.
தசை, பலம் இவற்றை அறிந்து சுபப் பலன்களை மேம்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளைப் பலர் அமைத்துக்கொள்ளாமல் விடுவதால், யோகங்களின் பலன்கள் முழுதாகக் கிடைப்பதில்லை. நம்மை நாமே சரிசெய்துகொண்டால் அடுத்த நொடியேகூட நமது வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும்.
மனிதர்கள் எல்லாருடைய ஆசையும் தன் தலைமுறையினருக்கு சொத்து சேர்க்க வேண்டும், தன் காலத்திற்குப் பிறகு தன் தலைமுறையினர் இன்பமாக வாழவேண்டும் என்பதே. சிலர் தன் தலைமுறையினருக்குப் பெரும் செல்வத்தையும் இன்பத்தையும் வைத்துவிட்டுச் செல்கின்றனர். பலர் தன் தலைமுறையினருக்கு பாவமூட்டையையும் கடனையும் உருவாக்கி வைத்து விடுகின்றனர்.
சிலருக்கு புதிய பணம் வந்து பருவ மாற்றத்தில் வருகின்ற தென்றல், காற்றாக பணத்தின் சுவையைக் காட்டி, தன்னை பணம் படைத்தவர் என்று காட்டிக்கொண்டு, உழைக்காமல் இருந்ததை செலவழித்துவிட்டு, பின்னர் பணத்துடன் வாழ்ந்த காலத்தை அசைபோட்டு கடனை உற்பத்திசெய்து தலைமுறையினரை பெரும் துன்பத்தில் மூழ்க வைக்கிறார்கள். குறிப்பாக சொந்தத்தொழில் செய்பவர்கள் "எங்கள் தலைமுறைக்கே வேலைக்குச் சென்று பழக்கம் கிடையாது. நான் பணக்காரன்; என் குழந்தை கோடீஸ்வர வம்சத்தில் பிறந்தவன்' என்று மார்தட்டி வாழவிடாமல் செய்கிறார்கள்.
ஒரு செயல் நமக்கு சரியில்லையா, நாம் எதைச் செய்தால் மேலும் பிரச்சினையாகரமல் இருக்கும் என்று யோசிக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை கௌரவம் என்றுமே யாரையும் வாழவைக்காது. உழைப்பையும் மூளையையும் பயன்படுத்துபவரே வெற்றிக்கனியை சுவைப்பவர்கள். தென்மாவட்டத்தில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய கோடீஸ்வர குடும்பம் ஜவுளி வணிகத்தில் கோடான கோடி சம்பாதித்து வந்தது. 1996 - 2004 கால கட்டத்தில் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் ஏற்றுமதித் தொழிலில் குறிப்பிட்டுச் சொல்லும்படி சாதனை படைத்தவர்கள். எங்கள் குடும்ப நண்பர். நான்காண்டுக்கு முன்பு என்னை போனில் தொடர்புகொண்டு, "எனக்கு ஜாதகம் பார்த்துச் சொல்' என்றார். வாட்ஸ்அப்பில் ஜாதகம் அனுப்பினார். அவருக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. கடவுள் நம்பிக்கை உண்டு. ஜாதகம் பார்க்கச் சொன்ன நாள் 26- 9-2014. அன்று கோட்சார சனி உச்சமாக துலாத்திலும், ராகு கன்னியிலும், குரு பகவான் கடகத்தில் உச்சமாகவும் இருந்தனர்.
அவருக்கு சந்திர தசையில் புதன் புக்தி 26-9-2014 வரை நடந்து கொண்டிருந்தது. 6-ல் நின்று சந்திரன் தசை நடத்துகிறது, புதன் 12-ல் நின்று புக்தி நடத்துகிறது. ஏழரைச்சனியின் தாக்கம் , கோட்சார ராகுவால் தொழில் முடக்கம், கோட்சார குருவும், ஜனன குருவும் 6, 8-ஆக இருந்ததால் பொருளாதார நெருக்கடி இருக்கும் என்று முடிவு செய்தாலும், இந்த பிரச்சினைகள் அவருக்கு வருமா என்று நினைத்துக் கேட்கவே தயக்கமாக இருந்தபோதும் கேட்டேன். "கடந்த நான்கு வருடமாக எனக்கு தொழில் ஒரு சதவிகிதம்கூட ஒத்துழைக்கவில்லை' என்று கூறினார்.
அவர்கள் கூட்டுத்தொழில் என்பதால் 2010-ல் தந்தையின் சகோதரர் மற்றும் தனது சகோதரரிடமும் தொழில் பிரிக்கப்பட்டுவிட்டது என்றும், தனது பங்கு முழுவதும் சொத்தாகவும், சகோதருக்கு அன்றாடம் பணப்புழக்கமுள்ள தொழில் சென்றுவிட்டதாகவும் கூறினார். இந்த நிலை எப்பொழுது மாறும் என்று கேட்டார். சந்திரன் இந்த ஜாதகருக்கு 2-ஆம் அதிபதி 6-ல் மறைந்து நீசம் பெற்றுள்ளார். இந்த தசை முடியும்வரை இவருக்கு சிரமம் என்பதைப் புரிந்துகொண்டு, விரைவில் சரியாகிவிடும் என்று சொல்லி, "உங்கள் மகனுடைய ஜாதகம் வேண்டும்' என்றேன். நான் பலமுறை கேட்டபிறகு 5-10-17 அன்று தன் மகனின் ஜாதக விவரம் தந்தார். மகனின் ஜாதகத்தில் குரு தசை, குரு புக்தி நடந்து கொண்டிருந்தது.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 98652 20406